வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் வர இருக்கும் புதிய மாற்றம்... பள்ளிக்கல்வித்துறையின் லேட்டஸ்ட் பிளான் இங்கே!
வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் வர இருக்கும் புதிய மாற்றம்... பள்ளிக்கல்வித்துறையின் லேட்டஸ்ட் பிளான் இங்கே!
அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரிய மற்றும் மாணவர் இடையிலான நல்லுறவு மேம்படுத்தல் போன்ற பல திட்டங்களை அரசு வெளியிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரிய மற்றும் மாணவர் இடையிலான நல்லுறவு மேம்படுத்தல் போன்ற பல திட்டங்களை அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "சிறந்த கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல; வாழ்க்கைக் கல்வியும் கூட! அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரிய- மாணவ நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு, நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்- மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை கவனித்து அரவணைத்து சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கி வருகின்றனர். ஆசிரியர் தமது கற்பித்தல் பணியுடன் மாணவர்களின் மனநலம் மேம்பட அவர்களோடு தொடர்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களையும் அரசு உணர்ந்திருக்கிறது. இந்தச் சிக்கல்களைக் களையும்வண்ணம் அரசு பின்வரும் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.
மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்து கொள்ள ஏதுவாக, மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர்- மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியால் செயல்படாமல் இருக்கும் இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.
மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், கூத்து, புகைப்படக் கலை, நடனம் போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
கலை - விளையாட்டுத் திறன்களிலும் மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
Comments
Post a Comment